உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 அல்லது 6 வயதாக இருந்தபோதே இந்த கொடூரமான செயல் தொடங்கப்பட்டதாகவும், “அப்பாக்கள் அனைவரும் மகள்களை இப்படித்தான் நேசிப்பார்கள்” என்று கூறி அந்த நபர் சிறுமியை ஏமாற்றி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் பல ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வந்த அந்த சிறுமி, கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 வயதை எட்டிய நிலையில், மிகுந்த தைரியத்துடன் தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதையடுத்து அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி அர்ச்சனா சாகர், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதி, “தன் மகளைப் பாதுகாக்க வேண்டிய ஒரு தந்தையே, அவளது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சிதைத்துள்ளார்; இத்தகைய குற்றவாளிகளுக்கு எந்தவிதமான கருணையும் காட்ட முடியாது” என்று கடுமையாகக் குறிப்பிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.