சீனாவின் தெற்குப் பகுதியான ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில், 30-க்கும் மேற்பட்ட ஜோடிகள் பங்கேற்ற கூட்டுத் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இடம்பெற்ற ஒரு ஜோடியின் திருமண பின்னணி, நெட்டிசன்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்த ஜோடியில், முன்னாள் ராணுவ வீரரான லியாங் ஜிபின் மற்றும் அவரைவிட 12 வயது இளையவரான லியு ஜிமி ஆகியோரின் காதல் கதை, 15 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பேரழிவில் தொடங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் வென்சுவான் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில், பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த பேரழிவில், 10 வயது சிறுமியான லியு ஜிமியும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ராணுவ வீரராக பணியாற்றிய லியாங் ஜிபின் தலைமையிலான மீட்புக் குழு உடனடியாக அங்கு விரைந்தது. நான்கு மணி நேரம் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அவர்கள், லியுவை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மயக்க நிலையில் இருந்த லியு, தன்னை மீட்ட வீரரின் முகத்தை மங்கலாக நினைவில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் லியு குடும்பத்துடன் ஹுனான் மாகாணத்துக்கு குடிபெயர்ந்தார். ஆண்டுகள் சென்ற  நிலையில், 2020-ம் ஆண்டு சாங்ஷா நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு பெற்றோருடன் சென்ற லியு (அப்போது வயது 22), அருகிலிருந்த மேஜையில் அமர்ந்திருந்த ஒருவரை பார்த்து, “இவர் உன்னை காப்பாற்றியவர் போல இருக்கிறாரே” என தாயார் கூறியுள்ளார்.

அதை கேட்ட லியு, நேரடியாக அந்த நபரிடம் சென்று, “லியாங் அண்ணா… நீங்கள்தான் என்னை காப்பாற்றியவரா?” என கேட்டுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த லியாங், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிறுமி இவ்வளவு வளர்ந்திருப்பதை உணர்ந்து நெகிழ்ந்ததாக கூறினார். அதன் பின்னர் இருவரும் தொடர்பில் இருந்து பேசத் தொடங்கினர். செல்போன் உரையாடல்கள், சந்திப்புகள் ஆகியவை நாளடைவில் காதலாக மாறின. லியாங் காட்டிய நேர்மை, மன உறுதி ஆகியவை தன்னை ஈர்த்ததாக லியு கூறுகிறார்.

“நன்றிக்காக நான் அவரை காதலிக்கவில்லை. என் வாழ்க்கையில் முழுமையாக நம்பக்கூடிய மனிதர்களில் அவர் ஒருவராக இருந்தார்” என லியு தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த லியாங்,
“12 ஆண்டுகளுக்கு முன் நான் அவளை காப்பாற்றினேன். இன்று அவளே என் வாழ்க்கையின் ஒளியாக மாறிவிட்டாள்” என உணர்ச்சிபூர்வமாக கூறினார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டுத் திருமணத்தில் இவர்களின் திருமணம் நடந்த நிலையில், இந்த காதல் கதையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “விதி விளையாடிய அழகான காதல்” என பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.