ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போய், பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல இரவு தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, விடிந்து பார்த்தபோது காணவில்லை எனத் தெரிகிறது. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தீவிரமாகத் தேடி அலைந்துள்ளனர். இந்த நிலையில், பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் அந்த 7 வயது சிறுமி சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அசுர வேகத்தில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி தவறி விழுந்து இறந்தாரா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தகவலறிந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் சென்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள், பெற்றோர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுடன், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சோகமான சம்பவம் சோசியல் மீடியாவிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
