அரசியல் நடிகர் விஜய் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடும் செய்திகளை குற்றம்சாட்டி, திமுக மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி தனது எக்ஸ் (X) பதிவில் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலாக சமூக வலைதளங்களில் பலரும் எதிர்வினை தெரிவித்ததால் விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ராஜிவ்காந்தி தனது பதிவில், “ஊடக நண்பர்களுக்கு… விஷயமில்லாமல் விஜய் எழுந்தார், பல் துலக்கினார், குளித்தார், வெளியே வந்தார் என செய்திகளைப் பதிவிடுகிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டின் சகோதரத்துவம், சமத்துவம் மீது காவிக் குழுக்கள் தாக்குதல் நடத்தும் நேரத்தில், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள்,” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

 

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பதிலடி கொடுத்து விவாதத்தை வெகுவாக விரிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் எழுப்பும் கேள்விகளில் சில: “முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் கேட்க வேண்டும்” தூய்மை பணியாளர்கள் போராட்டம், பல்வேறு கலவரங்கள், கள்ளச்சாராய சம்பவங்கள் போன்ற பல சமூக பிரச்னைகளில் அரசின் பங்கு குறித்து நெட்டிசன்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

“விஜய் குரல் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?” திருப்பரங்குன்றம் பிரச்சனையில் விஜயின் அமைதியை விமர்சித்த ராஜிவ்காந்தியின் பதிவுக்கு, சிலர் விஜய் அதிகாரத்தில் இல்லாததால் அவரிடம் எதிர்பார்ப்பு வைக்க முடியாது என கூறியுள்ளனர். “144 தடை உத்தரவை போட்டு கலவரத்துக்கு நீங்களே வழிவகுத்தீர்கள்” அரசின் நடவடிக்கையே பிரச்சனையை பெருக்கியதாக சில நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “உண்மையான பிரச்சனைகளை விட 200 ரூபாய் தொகைக்கு அரசை புகழும் செய்திகளையே வெளியிடுகிறீர்கள்” ஊடகங்களின் செயல்பாட்டையும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஒரு புறம் திமுக மாணவரணி செயலாளர் விஜயை விமர்சிக்க, மறுபுறம் நெட்டிசன்கள் அரசை கடும் மொழியில் எதிர்க்கும் வகையில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சூடான அரசியல் விவாதமாகி உள்ளது.