விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் நிலவி வரும் இழுபறி, தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்ததால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இன்று இந்த வழக்கின் இரண்டாவது நாள் விசாரணை நடைபெற்றபோது, படத்திற்கு எதிராகத் தணிக்கை வாரியம் முன்வைக்கும் புகார்கள் ஏற்கத்தக்கதாக இல்லை என்று நீதிபதி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

​நீதிபதியின் இந்த கருத்தைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் சற்று பின்வாங்கியுள்ளது. தங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கினால், படத்தின் மீதான புகார்கள் குறித்து முழுமையாகப் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியைக் கணக்கிட்டு ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.