விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதில் தணிக்கை குழுவிற்கும் (Censor Board), படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பெரிய சட்டப் போராட்டமே நடந்து வருகிறது. “நாங்கள் முறைப்படி முன்னரே விண்ணப்பித்தும், வேண்டுமென்றே எங்களுக்குச் சான்றிதழ் தரவில்லை” என்று தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகைக்குப் படம் வரும் என்று விளம்பரம் செய்துவிட்டதால், இப்போது சான்றிதழ் தராவிட்டால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

​இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நீங்கள் ரிலீஸ் தேதியை முன்பே அறிவித்திருந்தாலும், தணிக்கை வாரியத்தின் விதிமுறைகளையும் கால அவகாசத்தையும் (Timeline) கட்டாயம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்” என்று கறாராகக் கூறிவிட்டார். அதே நேரத்தில், தணிக்கை குழுவில் உள்ள ஒரு உறுப்பினரே படத்திற்கு எதிராகப் புகார் அளித்துள்ளார் என்பது இப்போதுதான் தங்களுக்குத் தெரியும் என்றும், அதுகுறித்த எந்தத் தகவலையும் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் பட நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.