சென்னையில் நேற்று சுனாமி 21-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, பட்டினப்பாக்கம் கடற்கரையில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, கடலில் பால் ஊற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தவெக தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை ‘பாஜகவின் பிள்ளைகள்’ என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “விஜயும் சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால், திருமாவளவன் யாருடைய பிள்ளை? திமுகவின் பிள்ளையா அல்லது காங்கிரஸின் பிள்ளையா? என்பதை அவரே தெளிவுபடுத்தட்டும்” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தல் நேரங்களில் மட்டும் திருமாவளவன் கோவில்களுக்குச் சென்று கையில் வேல் ஏந்தி வாக்கு சேகரிப்பதாக விமர்சித்த அவர், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே மற்ற நேரங்களில் இந்துக்களின் நம்பிக்கைகளை அவர் கொச்சைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது குறித்துத் திருமாவளவன் எழுப்பிய விமர்சனத்தைச் சுட்டிக்காட்டிய குஷ்பு, “கிறிஸ்துமஸ் அல்லது ரம்ஜான் கொண்டாடுவதால் எய்ம்ஸ் (AIIMS) வந்துவிடுமா? என்று அவரால் கேட்க முடியுமா? சிறுபான்மையினரைத் தொடப் பயப்படுபவர்கள், இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் ஏளனம் செய்கிறார்கள்” என்று சாடினார். 2026 தேர்தலில் பாஜகவின் பலம் நிரூபிக்கப்படும் என்றும், கூட்டணி குறித்துத் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
