நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா தொடர்பான விவகாரத்தில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த நடிகர் பார்த்திபன், தற்போது மீண்டும் ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து பொதுவெளியில் தோன்றியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பார்த்திபன், த்ரிஷாவின் புகைப்படத்தைப் பார்த்து, “குந்தவை வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்த த்ரிஷா, “ஒருவரிடம் மைக் இருப்பதால் அவர் பேசும் கருத்து நகைச்சுவையாகிவிடாது; அது முட்டாள்தனத்தை சத்தமாகப் பேசுவதாகும். அறிவு இல்லாத வார்த்தைகள், பேசுபவரைப் பற்றியே அதிகம் வெளிப்படுத்தும்” என்று பதிலடி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, “நடந்தது தவறாகவே நடந்துவிட்டது” எனப் பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ள பார்த்திபன் கூறியுள்ளதாவது, “நான் அந்த விழாவில் த்ரிஷா குறித்துப் பேசியது திட்டமிட்ட ஒன்று அல்ல. என் நண்பர் விஜயின் அரசியல் பயணம் எவ்விதச் சிக்கலும் இன்றிச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ஓர் ஆதங்கத்தில்தான் அந்தக் கருத்தைச் சொன்னேன்.

நடிகை த்ரிஷா இதுபோன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்வார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் முன்பே வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன். கரூர் விவகாரத்தில் விஜய்க்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் இந்தத் த்ரிஷா விவகாரம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பார்த்திபன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார் .மேலும் முன்னதாக இந்த விவகாரத்திற்கு நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கேட்ட போது பலரும் நீங்கள் பேசியதில் தவறில்லை என்று அவருக்கு ஆதரவாக பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.