தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வருகிறார். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. அரசியல் ரீதியாக விஜய் தீவிரமாகச் செயல்படும் நேரத்தில், இந்தத் தனிப்பட்ட விவகாரம் ஏன் இப்போது எழுப்பப்படுகிறது என சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சங்கீதாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர் கூறியிருப்பதாவது, “27 வருடங்கள் காத்திருந்துவிட்டு, ஒருவர் தனது வாழ்க்கையின் உச்சகட்டத்தில், ஒரு முக்கியமான இலக்கை நோக்கி நிற்கும் போது அவரது காலை வாரிவிட்டீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று சொல்லுங்கள்?
Srilankan Parliament MP Archuna.. about sangeetha 🤐 pic.twitter.com/q5UaoyomzQ
— Iʀsʜᴀᴅ (@irshad5005) March 7, 2026
அங்கு வந்து உங்களுக்கு ஒரு மாலை போட்டு, ஒரு பெரிய கோயிலையே கட்ட ஆசைப்படுகிறேன். நீங்கள் எப்படிப்பட்ட ஈனப்பிறப்பு என்று யோசித்துப் பாருங்கள். எனக்கு இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. ஒரு யாழ்ப்பாணத்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழனாகவும் இதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன்.” இவ்வாறு அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும் விஜய்யின் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத் தமிழ்ப் பின்னணியைக் கொண்டவர் என்பதால், அதே பகுதியைச் சேர்ந்த எம்.பி. அர்ச்சுனாவின் இந்த விமர்சனம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விஜய்யின் அரசியல் பயணத்தில் இந்த விவகாரம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதமும் ஒருபுறம் சூடுபிடித்துள்ளது..
