​”முதலமைச்சர் விஜய் அண்ணா, கொஞ்சம் வரலாற்றை எடுத்துப் படிங்க, வெறும் ஸ்கிரிப்ட் மட்டும் படிச்சா போதாது!” என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் காரசாரமாகத் தாக்கிப் பேசியுள்ளார். திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், கல்யாண வீடுகளில் எல்லாம் திமுகவினர் புலம்புகிறார்கள் என்று முதலமைச்சர் விஜய் விமர்சித்ததற்கு எழிலன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை திருமண மேடைகள் தான் தங்களின் பிரச்சார மேடைகள் என்றும், சுயமரியாதைத் திருமணங்களை நடத்துவதுதான் தங்களின் நெறி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

​மேலும், அந்த திருமண மேடைகளில் மக்களுக்குப் பகுத்தறிவையும், அரசியல் விழிப்புணர்வையும் ஊட்டுவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பொறுப்பு என்று எழிலன் குறிப்பிட்டார். திராவிட இயக்கத்தின் வரலாற்றைச் சற்றேனும் புரட்டிப் பார்த்திருந்தால் இந்த உண்மை முதலமைச்சர் விஜய்க்குத் தெரிந்திருக்கும் என்று சாடிய அவர், யாரோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை மட்டும் அப்படியே மேடையில் படிப்பதால் தான் விஜய்க்கு வரலாற்றுப் புரிதல் இல்லாமல் போய்விட்டது என்றும், அதன் காரணமாகவே அவர் இப்படிப் பேசியுள்ளார் என்றும் ஓப்பனாக அட்டாக் செய்துள்ளார்.