“ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 23 நாட்கள்தான் கடந்துள்ளன, அதற்குள் தமிழகத்தில் 64 கொலைகளும், 111 பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளன” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி விஜய் அரசைப் புள்ளிவிவரங்களுடன் அதிரவைத்துள்ளார். வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு சட்டம் ஒழுங்கைச் சரி செய்யத் துப்பிலாமல், தங்களின் தோல்விகளை மறைக்க ‘கடந்த திமுக ஆட்சியால் தான் இப்படி நடந்தது’ எனப் பழி போட்டுக் கொண்டிருப்பதாகக் கடுமையாக விமரிசித்தார்.
மதுரையில் வாகனத்தில் இருந்து பெண்ணின் சடலம் எடுக்கப்பட்டதையும், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய கனிமொழி, கலைஞர் மற்றும் தளபதி ஸ்டாலின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில், இன்று பெண்களின் பாதுகாப்பு ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகியுள்ளது என்றார். சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்காமல் வேறு யார் மீது பழி போடலாம் என்று காரணங்களைத் தேடிக்கொண்டிருந்தால், தமிழ்நாட்டு மக்கள் அதிக நாள் பொறுமையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
