தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது என்றும், நடிகர் விஜய் ஒருபோதும் அதிமுகவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே விமானத்தில் வந்திறங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பத்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் புத்தாண்டுப் பரிசாக பெரும் திருப்தியை அளித்துள்ளது.
பல்வேறு ஊடகங்களின் கணிப்புப்படி, தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் சூழல் உள்ளது. லயோலா கல்லூரி போன்ற நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளும் இதனையே உறுதிப்படுத்துகின்றன. விஜய் தனது அரசியல் வருகையின் மூலம் வாக்குகளைப் பிரிக்கலாமே தவிர, அவரால் வெற்றியை ஈட்ட முடியாது.
50 ஆண்டுகால அரசியல் வரலாற்றையும், பலமுறை ஆட்சியில் இருந்து வலுவான கிளைக் கட்டமைப்பைக் கொண்டுள்ள அதிமுகவின் இடத்தையும் அவரால் எட்டிப் பிடிக்க முடியாது. இங்கு திமுகவா, அதிமுகவா என்ற இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது; விஜய்யின் இரண்டாவது இடம் என்பது வெறும் கனவு மட்டுமே” என்றார்.
மேலும், தொழிலாளர்கள் மற்றும் செவிலியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், அரசு செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அவர்களின் போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
வேளாண் மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிலைப்பாடு என வலியுறுத்தினார்.
சேலம் ஜவுளிப் பூங்கா விவகாரம் மற்றும் தலிமா தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப் போவதாகத் தெரிவித்த வேல்முருகன், 200 நாட்களாகப் போராடி வரும் மண்ணின் மைந்தர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணாதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்
