நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேர்தல் பரப்புரைக்காக வந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 21 பேர் படுகாயமடைந்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, குன்னூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதற்காக, நாமக்கல்லில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வேன் மூலம் குன்னூருக்குப் பரப்புரை செய்ய வந்தனர்.
நாமக்கல்லில் இருந்து வந்த அந்த வேனில், வழியில் சென்னையைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் 7 பேர் ‘லிப்ட்’ கேட்டு ஏறியுள்ளனர். மொத்தம் 21 பேருடன் வேன் குன்னூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கரும்பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த 30 அடி ஆழப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பவே, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், பொதுமக்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் வேன் ஓட்டுநர், கிளீனர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பரப்புரைக்கு வந்த வாகனத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
