திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பெயரில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அரசு கல்லூரி பேராசிரியர் தமிழரசன் என்பவர், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அதிரடி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் த.வெ.க தலைவர் விஜய்யின் பெயர் குளறுபடி குறித்து அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அந்தப் புகார் கடிதத்தில் பேராசிரியர் தமிழரசன் குறிப்பிட்டுள்ளதாவது, த.வெ.க தலைவர் விஜய் தனது கட்சியின் அனைத்து அதிகாரப்பூர்வ கடிதத் தொடர்புகளிலும் (Letter Pad), அறிக்கைகளிலும் ‘த.வெ.க தலைவர் விஜய்’ என்றே குறிப்பிட்டு வருகிறார். ஆனால், தற்பொழுது திருச்சி கிழக்கு தொகுதிக்காகத் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது பெயரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது உண்மையான பெயர் என்ன என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அவரது பிரமாண பத்திரத்தில் பெயரில் உள்ள இந்த முரண்பாடு குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளது. மக்களிடையே ஒரு பெயரையும், தேர்தல் ஆவணங்களில் ஒரு பெயரையும் குறிப்பிடுவது வாக்காளர்களைக் குழப்பமடையச் செய்யும் செயல். எனவே, இந்தப் பெயர்க்குழப்பம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என அந்தப் புகாரில் பேராசிரியர் தமிழரசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடும் நிலையில், அவரது வேட்புமனுவின் மீதான இந்தத் தொழில்நுட்ப ரீதியான புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் த.வெ.க தரப்பில் என்ன பதில் அளிக்கப்படப் போகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.
