2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் கூட்டணி கலகலப்பாக மாறியுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது அண்மைய எழுச்சி பயணத்தில் “அ.தி.மு.க. கூட்டணியில் மிகப்பெரிய கட்சி விரைவில் இணைய இருக்கிறது” என கூறியதிலிருந்து பரபரப்பு கிளம்பியது.
சமூக வலைதளங்களில் உடனே பேசப்பட்டது அந்தக் கட்சி தமிழக வெற்றிக கழகம் (த.வெ.க.) ஆக இருக்கலாம் என்ற ஊகங்கள். இதைத் தொடர்ந்து, த.வெ.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் தரப்பிலும் விளக்கங்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் த.வெ.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன், “எங்கள் தலைவர் விஜய் தான் எங்கள் முதல்வர் வேட்பாளர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பவர்களோடு எங்களுக்குத் தொடர்பே இல்லை. மக்கள் மத்தியில் எங்கள் தலைவரின் ஆதரவு அதிகரிக்கிறது என்பதை பார்த்து சில கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.
எங்களது எதிரிகள் – மதவாத பா.ஜ.க.வும், குடும்பவாத தி.மு.க.வும் – இருவரையும் தோற்கடிக்கத்தான் த.வெ.க. களமிறங்கும்” என வலியுறுத்தினார்.
மேலும், “எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல். அவர் எடுத்த முடிவில் ஒரு சதவீதமும் பின்வாங்குவதில்லை. எங்கள் இயக்கம் மதச்சாயல், குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரானது. மக்கள் விரோத சக்திகளுடன் எந்தவிதமான கூட்டணியும் ஏற்க முடியாது. தேர்தல் முடிவுகள் மூலம் நாம் அதை நிரூபிப்போம். மக்கள் உண்மையை புரிந்து கொண்டு த.வெ.க.யை தேர்வுசெய்வார்கள்,” எனவும் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தருணத்தில் த.வெ.க.வின் இந்த உறுதியான நிலைப்பாடு, எதிர்கால அரசியல் கூட்டணிகளின் பாதையை தீர்மானிக்கக்கூடியது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
