கரூரில் நிகழ்ந்த பெரும் நெரிசல் துயர சம்பவம் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) செயற்பாடுகளில் தற்காலிக மந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரத்தின் பின்னணியில், தலைவர் விஜய் தற்காலிகமாக அனைத்து கட்சிப் பணிகளிலிருந்தும் விலகி அமைதியாக இருந்தார். அவர் மீண்டும்  எப்போது அரசியல் பணிகளை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பில் தவெகவினர் இருந்த நிலையில், தற்போது மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

தவெக வட்டார தகவல்களின் படி, விஜய் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தேர்தல் பரப்புரை மற்றும் கட்சி செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், கரூர் துயரத்தில் பலியான பொதுமக்களின் குடும்பங்களை எதிர்வரும் அக்டோபர் 27ஆம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் திட்டத்துடன் விஜய் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து, கட்சி வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் வேகமடையும் என தெரிவிக்கப்படுகிறது.

தவெகவினரிடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ள நிலையில், விஜய்  மீண்டும் களத்தில் இறங்கும் முடிவு, வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன் கட்சி கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் மத்தியில் வலியுறுத்தும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.