தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று நிகழ்த்தினார்.
தவெக சார்பாக இது முதல் முறையாக நடைபெறும் தேர்தல் பிரசாரம் என்பதால், விஜயை காண அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். இதில் ஏற்பட்ட திரளான கூட்டம் காரணமாக, காலை 10.30 மணிக்கு துவங்க வேண்டிய பிரசாரம், மாலை 3 மணி தாண்டிய பிறகே துவங்கியது. விஜய், அரசியல் மாற்றத்திற்கான தனது இலக்குகளை பொதுமக்களுக்கு விளக்கி பேசினார்.
இந்நிலையில், விஜயின் அரசியல் வருகை தொடர்பாக செய்தியாளர்கள் திமுக எம்.பி. கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. அவரால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் அண்ணா, பெரியார் ஆகியோரின் நெறிமுறைகளை பின்பற்றாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது” என கூறினார்.
