2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டியில், ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில்கள், டிரோன்கள் மற்றும் லேப்டாப் போன்ற பொருட்களுக்குத் தடை இருந்த நிலையில், தற்போது விசிலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

​சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அல்லது பிசிசிஐ (BCCI) தரப்பில் விசிலுக்குத் தடை விதிப்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், உள்ளூர் மைதான நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து இந்தப் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய தடைக்கு ஏதேனும் அரசியல் பின்னணி இருக்குமோ என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் அடையாளமாக விளங்கும் ‘விசில்’ சத்தம் உலகக்கோப்பை போட்டிகளில் ஒலிக்காதது கிரிக்கெட் ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.