கடந்த சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனைக்கு ஆளான திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, இன்று நடைபெறவிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தற்பொழுது அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஜராக வேண்டிய தினத்தில் முன்னாள் அமைச்சர் நேரில் வராமல் சிங்கப்பூர் மருத்துவமனைக்குச் சென்றுள்ள இந்தச் சம்பவம், அரசியல் மற்றும் விசாரணை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எ.வ.வேலு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தான் தற்போது சிங்கப்பூரில் உள்ள லைஃப் லைன் ஹார்ட் சென்டர் (Life Line Heart Centre) மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்னும் 10 நாட்களுக்கு அங்குத் தனக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டியுள்ளதால், சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பியவுடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்குத் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக அவர் அந்த மனுவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
