ஐபிஎல் 2026 தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த மிக முக்கியமான போட்டிக்கு முன்பாக கொல்கத்தா அணி வீரர்கள் ஜிம்மில் மல்யுத்தம் செய்து விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (மே 24) இரவு நடைபெறும் இந்த ஆட்டம் கொல்கத்தா அணிக்கு ‘வாழ்வா சாவா’ போட்டியாகும். இதனால் நிலவும் கடும் அழுத்தத்தைக் குறைப்பதற்காக, கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரின்கு சிங் மற்றும் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் ஆகிய இருவரும் ஜிம்மையே டபிள்யூடபிள்யூஇ (WWE) ரிங்காக மாற்றி வேடிக்கையாக சண்டை போட்டுக் கொண்டனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

வீடியோவில், டிம் சீஃபர்ட் முதலில் ரின்கு சிங்கின் கழுத்தைப் பிடிக்க, அடுத்த கணமே ரின்கு சிங் அவரைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த பெஞ்ச் மீது மல்லாந்து விழுகிறார். உடனே அங்கிருந்த அணியின் ஊழியர் ஒருவர் இருவரையும் சிரித்தபடியே விலக்கி விடுகிறார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள கொல்கத்தா நிர்வாகம், “ஜிம்மில் ப்ராக் லெஸ்னர் அதிரடி” என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளது. ரசிகர்களை இந்த வீடியோ பெரிதும் கவர்ந்துள்ளது.

தற்போது புள்ளிப்பட்டியலில் 6-ஆவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 13 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டெல்லியை வீழ்த்தினால் கொல்கத்தா 15 புள்ளிகளைப் பெறும். இருப்பினும் கொல்கத்தா பிளே-ஆஃப் செல்ல தற்போது நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்த வேண்டும். அப்படி நடந்தால், கொல்கத்தா அணி டெல்லிக்கு எதிராகப் பெரிய வெற்றியைப் பெற்று, பஞ்சாப் கிங்ஸ் அணியை விட சிறந்த ரன் ரேட் அடிப்படையில் 4-ஆவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.