ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான பிளே-ஆஃப் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே நடுவரின் ‘டிஆர்எஸ்’ (DRS) முடிவால் மைதானத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் புகுந்தனர்.
மும்பை அணியின் வில் ஜாக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரின் 4-ஆவது பந்து, ஜெய்ஸ்வாலின் கால்காப்பில் (Pad) பலமாகத் தாக்கியது. மும்பை வீரர்கள் அவுட் கேட்க, கள நடுவர் ‘நாட் அவுட்’ என்று தீர்ப்பளித்தார். உடனடியாக மும்பை அணி ‘டிஆர்எஸ்’ முறைப்படி மேல்முறையீடு செய்தது. மூன்றாவது நடுவர் இதனைப் பரிசோதித்தபோது, பந்து பேட்டில் பட்டதா என்பதை உறுதி செய்ய உதவும் ‘அல்ட்ரா எட்ஜ்’ தொழில்நுட்பம், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரையில் காட்டப்படவில்லை. இதனால் பல நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.
Both #RR openers back in the hut ✅@mipaltan are elated and how 💙
Updates ▶️ https://t.co/h2ze7K0gd6#TATAIPL | #KhelBindaas | #MIvRR pic.twitter.com/ZzM8XS5Bh9
— IndianPremierLeague (@IPL) May 24, 2026
இறுதியாக, அல்ட்ரா எட்ஜ் வசதி இல்லாமலேயே பந்து பேட்டில் படவில்லை என்று முடிவெடுத்த மூன்றாவது நடுவர், பந்து ஸ்டம்பைத் தாக்குவதை சரிபார்த்தார். அதில் பந்து ஸ்டம்பில் மோதுவது உறுதியான போதிலும், அது ‘நடுவரின் தீர்ப்பு’ என்ற விதியின் கீழ் வந்ததால் ஜெய்ஸ்வால் அதிர்ஷ்டவசமாக விக்கெட்டில் இருந்து தப்பினார். இதனால் மும்பை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
எனினும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிய ஜெய்ஸ்வால், அதே ஓவரில் வில் ஜாக்ஸின் சுழலில் சிக்கி 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷியும் 4 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 33 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுவரின் இந்தத் தொழில்நுட்பக் குழப்பம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
