டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் பரபரப்பான சூப்பர்-8 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 55 ரன்களும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களும், திலக் வர்மா 44 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணியில், தொடக்க வீரர் பிரையன் பென்னட் மட்டும் தனி ஆளாகப் போராடி 97 ரன்கள் சேர்த்த போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 184 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது. வரும் ஞாயிற்றுக்கிழமை  கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால், அந்தப் போட்டி ஒரு ‘வாழ்வா-சாவா’ ஆட்டமாக மாறியுள்ளது.