இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் தந்தை கஞ்சந்திர சிங் (61), நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் (Stage-4 Liver Cancer) பாதிக்கப்பட்டிருந்தார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள யதார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்தது.
இதற்கிடையே, டி20 உலகக்கோப்பை தொடருக்காகச் சென்னையில் இருந்த ரிங்கு சிங், தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்து உடனடியாகச் சொந்த ஊருக்குத் திரும்பினார். கடந்த சில நாட்களாகச் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கஞ்சந்திர சிங், இன்று (பிப். 27) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அலிகார் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து, மிகவும் வறுமையான சூழலிலும் தனது மகனைச் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கிய அவரது மறைவு, விளையாட்டு உலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு வருத்தமான விஷயம் என்னவென்றால், வரும் ஜூன் மாதம் ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாடி கட்சி எம்.பி. பிரியா சரோஜிற்கும் காசி (வாரணாசி) நகரில் திருமணம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. தனது மகனின் திருமணத்தைப் பார்க்காமலேயே அவர் மறைந்திருப்பது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் ரிங்கு சிங்கிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
