திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது.

சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு தடை ஆணையை பிறப்பித்தது. தமிழ்நாட்டின் அதிகார வரம்பிற்குட்பட்ட 5 நாட்டிக்கல் மைல் எல்லை பகுதிக்குள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. காரணம், இந்த சுருக்குமடி வலைகளால் அரிய வகை உயிரினங்களும், பவளப்பாறைகள் உள்ளிட்டவை எல்லாம் அரித்து செல்லப்படுகிறது என குறிப்பிட்டு தான்  தடை விதிக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய மீன்பிடிக்கக்கூடிய மீனவர்களுக்கும், இதனால் பெரும் பாதிப்பு உருவாகிறது என்பதுதான் தமிழக அரசின் வாதமாக இருந்தது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், தமிழ்நாடு அரசின் முடிவை உறுதி செய்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து இதற்கு எதிராக மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான தமிழ்நாடு அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்கள். தமிழக அரசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி இருந்தார்கள். மத்திய அரசும் கிட்டத்தட்ட அதே மாதிரியான விஷயங்களை சொல்லிய நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுருக்கும்படி வலைகளை பயன்படுத்துவதற்கு தற்போது உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம். வாரத்தில் 2 நாட்கள் (திங்கள், வியாழன்) மட்டுமே மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.. காலை 8:00 மணி முதல் மாலை 6 மணி வரை எட்டுமே இந்த வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகளில் மட்டுமே இந்த சுருக்கும்படி வலைகளை எடுத்துச் செல்ல வேண்டும், அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் படகுகளுக்கு ஜிபிஎஸ் (ட்ராக்கிங் கருவி) கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். சுருக்குமடி வலையுடன் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்றும், நாட்டுப் படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் சமமான பலனை பெறவே இந்த உத்தரவு எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  தற்போது இடைக்கால நிவாரணமாக சுருக்கும்படி வலைகளை கடும் கட்டுப்பாடுகளை உடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.