பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தான் முதல்வராக பொறுப்பேற்றால் என்னுடைய முதல் கையெழுத்து இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவது தான் என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நீதி கட்சி ஆட்சி காலத்தில் கடவுளின் பெயர்கள் மற்றும் சாஸ்திரங்களின் பெயரில் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கும்பலின் பிடியிலிருந்து ஆலயங்களையும் அதன் சொத்துக்களையும் மீட்டெடுப்பதற்கு உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை. இதற்கு 100 வருடங்கள் தாண்டிய வரலாறு இருக்கிறது. இதை அண்ணாமலை உணர வேண்டும்.

கோவில் நிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் கோவில் நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் அவற்றை சேதாராம் இல்லாமல் பாதுகாத்து வருகிறார்கள். அதன்பிறகு கோவில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள சில மதவாத சக்திகள் மற்றும் சனாதன சக்திகள் சிலைகளை கடத்துவது, நகை மற்றும் பணம் போன்றவற்றில் கையாடல் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டு வரும் செய்தியை பொறுத்துக் கொள்ள முடியாத சில சுயநலவாதி சக்திகளின் உணர்வுகளை அண்ணாமலை பிரதிபலித்து பகல் கனவு காண்கின்றார். அவருடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது திசை திருப்பும் உள்நோக்கம் கொண்ட வஞ்சகக் குரல் என்பது இயல்பான ஆன்மீகவாதிகளுக்கு எளிதில் புரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.