ராஜஸ்தானின் பீல்வாரா மாவட்டம், பிஜோலியா பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் புதைந்து கிடந்த 15 நாட்கள் ஆன பிறந்த குழந்தையை உயிருடன் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தையின் உதடுகளில் பேவிக்விக் ஒட்டப்பட்ட நிலையில், வாயில் கல் திணித்து, வெப்பம் அதிகமான கற்களின் கீழ் மூடி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இறைவனின் அருளால், அருகே மாடு மேய்ச்சலுக்கு வந்திருந்த நபரால் விஷயம் வெளிச்சத்துக்குப் வந்தது. அவரின் விழிப்புணர்வால் கிராம மக்கள் உடனே தகவல் தெரிவித்து, குழந்தையை மீட்டனர்.
சிறுவனை முதலில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யூ.வில் அனுமதித்தனர். குழந்தையின் உடலில் எரிச்சல் மற்றும் காயங்களுடன், வாயை மூடியிருந்த பேவிக்விக் சுவாசிக்க தடையாக இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை தீவிர சிகிச்சையில் வைத்துக், சிறப்பான ஆக்ஸிஜன் ஆதரவுடன், பாக்டீரியா தொற்றைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குழந்தையின் உடல் எடை சுமார் 3.1 கிலோகிராம் என்பதும், குழந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக பீல்வாரா மாவட்டக் குழந்தை நலக் குழு உறுப்பினர் விநோத் ராவ், “குழந்தையின் பாதுகாப்பு, சிகிச்சை மற்றும் எதிர்கால நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் சமூக விழிப்புணர்வின் அவசியத்தைக் கூறுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பீல்வாரா மாவட்டத்தில் இதுபோன்ற 8 குழந்தைகள் பிறந்த பிறகு கைவிடப்பட்டனர். அவர்களை பாதுகாப்பதற்காக அரசு மற்றும் சமூக நலத்துறை இணைந்து செயல்படுகின்றன” என கூறியுள்ளார் . மேலும் இந்தக் குழந்தையை காட்டில் விட்டுச்சென்ற பெற்றோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசாரும் உறுதி தெரிவித்துள்ளனர்.
