மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில், வாட்ஸ்அப் முகப்புப் படம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அவரது மனைவியின் கண் முன்னாலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டம் நளசோப்ரா பகுதியைச் சேர்ந்த அப்தாப் ஷேக் என்பவருக்கும், வங்கதேசத்தைச் சேர்ந்த மஹதி ஹசன் ஷேக் என்பவருக்கும் இடையே இந்த மோதல் வெடித்தது.
மேலும் மஹதி ஹசன் தனது வாட்ஸ்அப் முகப்புப் படத்தில் வைத்திருந்த அவரது மகனின் புகைப்படம் குறித்து, அப்தாப் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததே இந்த விபரீதத்திற்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று அதிகாலை இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மஹதி ஹசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்தாப் ஷேக்கை சரமாரியாகக் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்தாப், தனது மனைவியின் அலறல் சத்தத்திற்கு இடையே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலையாளி மஹதி ஹசனைக் கைது செய்தனர்.
இந்நிலையில் விசாரணையில், கைது செய்யப்பட்ட மஹதி ஹசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு சிறிய சமூக வலைதளப் புகைப்படம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
