இந்தியாவின் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழாவானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை பாஜகவை சேர்ந்தவர்களும் அவரது தீவிர ஆதரவாளர்களும் பல்வேறு முறையில் கொண்டாடி வந்தனர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மெயின் ரோட்டில் ஏழுமலை என்பவர் டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். அதுமட்டுமின்றி பிரதமரின் ஒவ்வொரு பிறந்தநாளை முன்னிட்டு ஏழுமலை தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை இலவசமாக டீ குடிக்க அனுமதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 12வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு டீ வழங்கி வருகிறார். இதனிடையே பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன், ஏ.என்.எஸ் பிரசாத், மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏழுமலையின் கடைக்கு சென்றனர். இவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்ததோடு அங்கு டீ குடித்தனர். அதுமட்டுமின்றி தமிழிசை சவுந்தரராஜன் டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.