கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை விரிவாகப் பரவி உள்ள 27 கிலோமீட்டர் நீளமான பைபாஸ் சாலையை முன்னதாக எல் & டி நிறுவனம் நிர்வகித்துவந்தது. தற்போது, இந்த சாலையின் பராமரிப்பு பொறுப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஏற்கியுள்ளது. இதனையடுத்து, சாலையில் இயங்கிவந்த 6 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தற்போது மதுக்கரை அருகே இயங்கும் ஒரே சுங்கச்சாவடி மட்டுமே கட்டணம் வசூலிக்கும் நிலை தொடர்கிறது. இதற்கமைய, தேசிய நெடுஞ்சாலை விதிமுறைகள் 2008ன் படி புதிய கட்டண அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு திரும்பும் பயணத்திலும் மாதாந்திர பாஸ் வசதிகளிலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுக்கரை சுங்கச்சாவடியை மையமாகக் கொண்டு 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கான வணிக நோக்கமில்லாத வாகனங்களுக்கு மாதச் சந்தா ரூ.350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவையில் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.20 முதல் ரூ.115 வரை சலுகை கட்டணங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணங்களுக்கு 25% சலுகையும், ஒரு மாதத்திற்குள் பயணிக்கும் வாகனங்களுக்கு 33% சலுகையும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டண விவரங்கள் பின்வருமாறு: கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு ரூ.35, அதே நாளில் திரும்பினால் ரூ.55 வசூலிக்கப்படும். மினி பஸ் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.60 (ஒரு பயணம்), ரூ.90 (இரண்டு பயணம்). பஸ்கள் மற்றும் டிரக் வகை வாகனங்களுக்கு ரூ.125 மற்றும் ரூ.185 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 அச்சு வணிக வாகனங்களுக்கு ரூ.135/200, கனரக எந்திர வாகனங்களுக்கு ரூ.195/290 மற்றும் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சு கொண்ட வாகனங்களுக்கு ரூ.235/350 என கட்டணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
