கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 24 வயது இளம்பெண்ணின் இரண்டரை வயது பெண் குழந்தை கடந்த டிசம்பர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தது. குழந்தைக்கு வலிப்பு வந்ததால் உயிரிழந்ததாகத் தாய் கூறிய நிலையில், குழந்தையின் தந்தை தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது இயற்கை மரணம் அல்ல, கொடூரமான கொலை என்பது உறுதியானது.
போலீசாரின் தீவிர விசாரணையில், அந்த இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான பெரியநாயகம் (40) என்பவர், தாய் இல்லாத நேரத்தில் குழந்தைக்குக் கடும் பாலியல் தொந்தரவு கொடுத்தது அம்பலமானது. இந்த கொடூரச் செயலால் உடல்நலம் பாதிக்கப்பட்டே அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, பெரியநாயகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அஞ்செட்டி போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
