ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் வீசிய பந்தை, முழங்காலிட்டு அப்படியே டீப் ஸ்கொயர் லெக் திசையில் மெகா சிக்ஸராக பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட் போன்ற ஜாம்பவான்களின் பந்துவீச்சை சிதறடித்த வைபவ், நரைன் வீசிய இரண்டாவது பந்திலேயே தனது ‘ஸ்ட்ரைக்’கை காட்டிவிட்டார்.
இந்த சீசனில் 5 போட்டிகளில் 200 ரன்களை 263 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள இவர், ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.
இருப்பினும், வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வைபவ் ஆட்டமிழந்த பிறகு, ராஜஸ்தான் அணி சரிவைச் சந்தித்தது.
வருண் சக்கரவர்த்தியின் துல்லியமான பந்துவீச்சால் (3/14) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. 14 வயதே ஆன ஒரு சிறுவன், உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை இப்படி ‘துவம்சம்’ செய்வது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
