ஐபிஎல் 2026-ன் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, வருண் சக்ரவர்த்தி (3/14) மற்றும் கார்த்திக் தியாகியின் (3/22) துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலைந்தது. வைபவ் சூர்யவன்ஷி அதிகபட்சமாக 46 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் 155 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கே.கே.ஆர் அணியில் டிம் சீஃபர்ட், ரஹானே மற்றும் ரகுவன்ஷி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஒரு கட்டத்தில் தடுமாறிய அணியை ரிங்கு சிங் தனது பொறுப்பான ஆட்டத்தால் மீட்டார். 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங், 19.4 ஓவர்களில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இவருடன் கைகோர்த்த அனுகுல் ராய் 29 ரன்கள் எடுத்துப் பக்கபலமாக இருந்தார். இந்தத் த்ரில் வெற்றியின் மூலம் கே.கே.ஆர் தனது நீண்ட நாள் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
