தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழிகுடியை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமத்து மக்கள் வெளியே வர முடியாத நிலை நிலவுகிறது. சுமார் 800க்கும் மேற்பட்டோர் ஆழிகுடியில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் வந்தால் மட்டுமே ஆழிகுடி மக்களை மீட்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அளவும் அதிகரித்து வருகிறது. மேலும் ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தொடர்ந்து நெல்லை மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி நீர் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை ஏராளமான குக்கிராமங்கள் இருபுறமும் உள்ளது. இதில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி  கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பம் உள்ளது.

இந்த குடும்பத்தில் 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்றைய தினமே இந்த பகுதியில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் தற்போது முழுமையாக இரு புறமும் வெள்ளநீர் ஓடுகிறது. இந்த ஊருக்கு செல்ல ஒரே சாலை தான் உள்ளது. இந்த கிராம சாலை தற்போது முற்றிலுமாக அரிக்கப்பட்டு கிராம சாலை என்பது முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த ஊரில் உள்ள 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தவித்து வருகின்றனர். சிறு சிறு வீடுகளில் உள்ள மக்கள் தற்போது மாடிகள் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்த நிலையில் குடிக்க தண்ணீர் கூட இல்லை என்ற நிலை நிலவுகிறது. சிலர் உணவின்றி மயங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் வந்தால் மட்டுமே ஆழிகுடி மக்களை மீட்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.