தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளரும் நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், திமுக மற்றும் அதன் ஆதரவுப் படைகளை அதிரடியாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

தவெக மேடையில் உரையாற்றிய அவர், திமுக தற்போது வாடகை பேச்சாளர்களை நம்பிதான் உயிர் வாழ்வதாகச் சாடினார். குறிப்பாக, நடிகர் வடிவேலு கடந்த காலங்களில் கேப்டன் விஜயகாந்தை எதிர்த்துப் பேசி தனது சினிமா வாய்ப்புகளை இழந்ததைச் சுட்டிக்காட்டிய நாஞ்சில் சம்பத், தற்போது மீண்டும் அவர் திமுக மேடையில் தோன்றுவது கேலிக்குரியது என்றார்.

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் ரெட் ஜெயண்ட் மூவீஸ் போன்ற சக்திகளை நம்பித் தனது மார்க்கெட்டை இழந்துவிட்டதாகவும், தற்போது அவர் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு சக்தியைத் தமிழகத்தின் 35 சதவீத வாக்காளர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார்.

அண்ணா ஆட்சிக்கு வர 18 ஆண்டுகள் ஆனது, எம்ஜிஆருக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது, ஆனால் கட்சி தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து நடிகர் விஜய் புதிய வரலாறு படைப்பார் என அவர் உறுதிபடத் தெரிவித்தார். விஜய்யின் எழுச்சியைக் கண்டு அறிவாலயத்தின் தூண்கள் ஆடுவதாகவும், அதனால் தான் 26 கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு திமுக கூட்டணி அமைக்கத் திணறுவதாகவும் அவர் எள்ளி நகையாடினார்.

நடைமுறைக்குச் சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே விஜய் அளிப்பார் என்றும், எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் ‘வீட்டுக்கு ஒரு பிரிட்ஜ்’ போன்ற திட்டங்கள் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என்றும் நாஞ்சில் சம்பத் தனது பாணியில் அடுக்குமொழியில் விமர்சித்தார்.