அமெரிக்காவைச் சேர்ந்த டிராவல் இன்ஃப்ளூயன்சர் ‘தாரா’ என்பவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பயணங்களின் போது சுத்தமான உள்ளாடைகள் தீர்ந்துவிட்டால், ஹோட்டல் அறையில் இருக்கும் காபி மெஷினைப் பயன்படுத்தி அவற்றைச் சுத்தம் செய்யலாம் என அவர் ஒரு விசித்திரமான யோசனையை வழங்கியுள்ளார். காபி மெஷினில் உள்ளாடையைப் போட்டு, சுடுநீர் மூலம் அதனைத் துவைக்கும் காட்சிகளை அவர் பதிவிட்டுள்ளது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தனது தோழி ஒருவரிடம் இருந்து கற்றுக் கொண்ட ‘லைஃப் ஹேக்’ இது என அவர் பெருமையுடன் கூறியதுதான் வினையாக முடிந்தது.

​இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அடுத்ததாக அந்த அறையில் தங்கும் விருந்தினர்களின் உடல்நலத்தோடு விளையாடுவது எவ்வளவு சுயநலமானது எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். வெறும் லைக்ஸ் வாங்குவதற்காகவும், பிரபலம் அடையவும் இது போன்ற அருவருப்பான செயல்களைச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். இனிமேல் ஹோட்டல்களில் இருக்கும் காபி மெஷின்களைத் தொடுவதற்கு முன்னரே பலமுறை யோசிக்க வேண்டும் எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.