உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்  சிறுநீரகக் கல் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு, லேசர் சிகிச்சைக்குப் பதிலாக அறுவை சிகிச்சை செய்ததில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷா ராய் (24) என்ற இளம்பெண், சிறுநீரகக் கல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அனிஷாவைச் சோதித்த மருத்துவர்கள், அவருக்கு ‘லேசர்’ முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதன்படி, அனிஷாவின் குடும்பத்தினர் பணத்தைச் செலுத்தியுள்ளனர். நேற்று லேசர் சிகிச்சை நடைபெறவிருந்த நிலையில், மருத்துவர்கள் திட்டமிட்டபடி லேசர் முறையைப் பின்பற்றாமல், திடீரென அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சையின் போது அனிஷாவிற்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சுயநினைவை இழந்தார். பதற்றமடைந்த மருத்துவமனை நிர்வாகம், மேல் சிகிச்சைக்காக அவரை லக்னோவிற்கு கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. ஆனால், லக்னோவிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனிஷா ராய் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவர்களின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி, அனிஷாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாகத் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அனிஷாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், சிகிச்சையில் கவனக்குறைவாக இருந்ததாக 5 மருத்துவர்கள் மீது காவல்துறையினர் கொலை வழக்கு திவு செய்துள்ளனர்.மேலும்  இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.