மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில், லிஃப்ட் கேட்டு காரில் ஏறிய 32 வயதுப் பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்த 35 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பெண், பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் தனது சகோதரர் தாயைத் துன்புறுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு செல்லப் புறப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 25-ஆம் தேதி, நெடுஞ்சாலையில் லிஃப்ட் கேட்டு நின்றபோது, புனே நோக்கிச் சென்ற கார் ஒன்று நின்றது.
எழுதுபொருள் கடை (Stationery shop) நடத்தி வரும் அந்த நபர், அப்பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். சுமார் 3 கி.மீ தூரம் சென்ற பிறகு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய அந்த நபர், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பெண் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் காரிலிருந்து வெளியே இழுத்துச் சென்று அப்பெண்ணைப் பலாத்காரம் செய்ததோடு, யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
வீடு திரும்பிய அந்தப் பெண், மறுநாள் காவல்நிலையத்தை அணுகி புகார் அளித்தார். குற்றவாளி தப்பிச் செல்லும்போது அவர் பயணித்த காரின் பதிவு எண்ணை அப்பெண் குறித்து வைத்திருந்தது விசாரணையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அந்த நபரைக் கண்டறிந்து கைது செய்தனர். மேலும் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31-ஆம் தேதி வரை அவரைப் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அந்தத் துப்பாக்கியைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
