மும்பையில் ஊபர் கார் முன்பதிவு செய்த பெண் பயணி ஒருவருக்கு, அந்த ஓட்டுநர் அனுப்பிய அநாகரீகமான குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண் பயணி, இரவு 8:58 மணியளவில் தனது பயணத்திற்காக ஊபர் செயலியில் கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அப்போது அந்த ஓட்டுநரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி அப்பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த ஓட்டுநர், “தனது இதயம் உடைந்துவிட்டதாகவும், தனக்கு நண்பராக இருந்தால் மட்டுமே சவாரிக்கு வருவேன்” என்றும் நிபந்தனை விதித்து மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், “நான் என்ன ஏதேனும் தரம் குறைந்த டேட்டிங் ஆப்பிலா இருக்கிறேன்? ஒரு வாடிக்கையாளரிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?” எனச் சாடியுள்ளார். அந்த ஓட்டுநரின் பெயர் மற்றும் வண்டி எண்ணுடன் கூடிய ஆதாரங்களை அவர் சேகரித்து வைத்துள்ளார்.
View this post on Instagram
தனிப்பட்ட ஒரு சம்பவமாக இதைப் பார்க்க முடியாது என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஊபர் நிறுவனம் தனது ஓட்டுநர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஓட்டுநர்கள் பயணிகளுக்கு அனுப்பும் செய்திகளைத் தணிக்கை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஊபர் இந்தியா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இத்தகைய தரம் தாழ்ந்த செயல்கள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
