சீனாவில் நிலவி வரும் கடும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விளைவாக, இளைஞர்கள் வேலை தேடுவதற்கு ‘டேட்டிங்’ (Dating) செயலிகளையும், வரன் தேடுவதற்கு வேலைவாய்ப்பு செயலிகளையும் பயன்படுத்தும் வினோத கலாசாரம் பரவி வருகிறது. சீனாவில் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் 16 சதவீதத்திற்கும் அதிகமாகவே நீடிக்கிறது. நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தாலும் முறையான பதில் கிடைப்பதில்லை என இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், சோர்வடைந்த இளைஞர்கள் தற்போது தங்கள் வேலை தேடல் களத்தை டேட்டிங் செயலிகளுக்கு மாற்றியுள்ளனர்.
தங்கள் விருப்பமான நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுடன் டேட்டிங் செயலிகள் மூலம் பழகி, அதன்மூலம் பரிந்துரை பெற்று வேலை தேடுவதை இவர்கள் உத்தியாகக் கொண்டுள்ளனர். சீனப் பெண் ஒருவர் தான் விரும்பிய நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரை டேட்டிங் செயலி மூலம் சந்தித்துள்ளார். முதலில் காதல் எண்ணம் இல்லாவிட்டாலும், அந்த நபர் மூலம் அந்த நிறுவனத்திலேயே பணியில் சேர்ந்துள்ளார். வேலைவாய்ப்பு தளங்களை விட டேட்டிங் செயலிகளில் மக்கள் அதிக மரியாதையுடன் பதில் அளிப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
மறுபுறம், வேலைவாய்ப்பு செயலிகளில் ஆள் எடுக்கும் மேலாளர்களிடம் தங்களின் திருமண நிலை மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்துப் பேசி வரன் தேடும் போக்கும் அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சீனாவின் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனமான ‘பாஸ் ஜிபின்’ (Boss Zhipin), தனது தளத்தை டேட்டிங் செயலியாகவே மாற்றியுள்ளது. “வரன் தேடுவது என்பது ரெஸ்யூம் சரிபார்ப்பது போன்றது” என்ற வாசகத்துடன் இது விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில் வருமானம், கல்வித் தகுதி போன்றவை வருமான வரித் தாக்கல் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தலைகீழ் மாற்றத்தில் சில சங்கடங்களும் நீடிக்கின்றன. வேலை தேடும் பெண்கள் தங்களின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ஆள் எடுக்கும் மேலாளர்கள் காதலிக்குமாறு தொந்தரவு செய்வதாகப் புகார் கூறுகின்றனர். டேட்டிங் செயலிகளில் முறையான சரிபார்ப்பு முறைகள் இல்லாததால், தனிப்பட்ட தகவல்கள் கசிவதற்கும், போலி நிறுவனங்களிடம் ஏமாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் காதலை விடப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் இக்கால இளைஞர்கள், தங்களது வாழ்க்கைத்துணையை ‘உயிர்த் தோழன்’ (Soulmate) என்பதற்குப் பதிலாக ‘கூட்டுப் பணியாளர்’ (Teammate) என்றே அழைக்க விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
