தனக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்ததை திட்டமிட்டு மறைத்து, லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்ய முயன்ற பெண்ணின் அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் பிரிட்டனில் கடந்த 20 வருடங்களாக வசித்து வரும் 46 வயது மதிக்கத்தக்க குஜராத் தொழிலதிபர், கடந்த 2020 ஆம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் மும்பை அந்தேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். தனக்கு ஒருமுறை மட்டுமே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகக் கூறி ஆசை வார்த்தை பேசிய அந்தப் பெண், லண்டன் மாப்பிள்ளையிடம் இருந்து விசா, விமான டிக்கெட்டுகள், ஆடம்பர மொபைல் போன் மற்றும் கைச்செலவு என பிரிட்டிஷ் பவுண்டுகளாக லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்துள்ளார்.
இதனால் இவர்களின் காதல் முற்றி கடந்த 2020 நவம்பரில் லண்டனில் வைத்து ஆடம்பரமாக நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், லண்டன் மாப்பிள்ளையின் முகநூல் கணக்கில் இருந்த ஒரு பொதுவான நண்பர் மூலமாக அந்தப் பெண்ணின் அசல் லீலைகள் அம்பலமாகின. அந்தப் பெண் ஏற்கனவே பலரை ஏமாற்றிய கில்லாடி என்பதும், அவருக்கு ஒருமுறை அல்ல… மொத்தம் மூன்று முறை வெவ்வேறு நபர்களுடன் திருமணமாகி இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் உண்மை தெரிந்து மாப்பிள்ளை வீட்டார் பணப் புழக்கத்தை நிறுத்தியவுடன், இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டிய அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மாப்பிள்ளையை சமூக வலைத்தளங்களில் ‘பிளாக்’ செய்துவிட்டு தலைமறைவாகினர். தற்போது பாதிக்கப்பட்ட NRI இளைஞர் அளித்த புகாரின் பேரில், மும்பை டி.என்.நகர் போலீசார் அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
