ஐபிஎல் 2026 தொடரின் 10-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா வெறும் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தார்.

இந்தப் போட்டியில் அவர் ரன் கணக்கைத் தொடங்காமல் வெளியேறியதன் மூலம், சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்து ஒரு விரும்பத்தகாத சாதனையைப் படைத்துள்ளார்.

2026-ம் ஆண்டு அபிஷேக் சர்மாவிற்கு ஒரு சோதனையான ஆண்டாகவே அமைந்து வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 முறை, 2026 டி20 உலகக் கோப்பையில் 3 முறை என ஏற்கனவே 5 முறை டக் அவுட் ஆகியிருந்த அவர், தற்போது ஐபிஎல் தொடரின் தனது இரண்டாவது போட்டியிலும் ‘முட்டை’ ரன்னில் வெளியேறியுள்ளார்.

இதன் மூலம் ஒரே ஆண்டில் மொத்தம் 6 முறை டக் அவுட் ஆகி, இதற்கு முன் 2018-ல் ரோஹித் சர்மா மற்றும் 2024-ல் சஞ்சு சாம்சன் ஆகியோர் படைத்திருந்த மோசமான சாதனையைச் சமன் செய்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் அபிஷேக் சர்மாவின் இந்தத் தொடர் சறுக்கல், அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.