ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முகமது ஷமி வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் பவர்பிளே முடிவில் ஹைதராபாத் அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

​பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்றி கிளாசன் (62 ரன்கள்) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (56 ரன்கள்) அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதற்கிடையில், 13 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டன், திக்வேஷ் ரதி வீசிய பந்தில் ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். அப்போது ரிஷப் பண்ட் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அந்தரத்தில் பாய்ந்து ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹைதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன், தனது தலையில் கைவைத்து விரக்தியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.