இந்தியாவின் பொது விநியோக முறையை முற்றிலும் நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் ரூ.350 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்-பிடிஎஸ்’ (SMART-PDS) திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில், உணவு தானியக் கொள்முதல் முதல் பயனாளிகளுக்குச் சென்று சேர்வது வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் ஒரே ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களின் தொடர்ச்சியாக, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2025 டிசம்பர் வரை நாடு முழுவதும் சுமார் 6 கோடியே 77 லட்சம் போலி மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய தரவு ஆய்வுகளின் மூலம், உயிரிழந்தவர்கள் மற்றும் ஒரே பெயரில் பல இடங்களில் பதிவு செய்துள்ளவர்கள் என மேலும் 2 கோடியே 91 லட்சம் பயனாளிகளின் விவரங்கள் சந்தேகத்திற்குரியதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களைக் கள ஆய்வு செய்து நீக்கும் அதே வேளையில், தகுதியுள்ள ஏழை எளிய குடும்பங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் விடுபடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ரேஷன் மானிய விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயமான ‘இ-ருபீ’ மூலமாக மானியம் வழங்கும் முன்னோடித் திட்டத்தை விரிவுபடுத்தவும் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், தானியப் போக்குவரத்தைச் சீரமைக்கும் ‘அன்ன சக்ரா’ போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உணவு தானியங்களைக் கொண்டு செல்லும் செலவில் ஆண்டுக்குச் சுமார் ரூ.250 கோடி வரை மிச்சப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இயங்கும் 403 ரேஷன் கடைகளுக்கும் சீரான டிஜிட்டல் கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி அட்டைதாரர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுமார் 80 கோடி உண்மையான பயனாளிகளுக்குப் பலன்கள் தங்கு தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்தச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கமாகும். இத்தகைய டிஜிட்டல் மாற்றங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு அமைப்பில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.