கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தர்ஷன் ரேணுகாசாமி கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருக்கிறார். மேலும் இவர் சிறையில் தனக்கு படுக்கை மற்றும் தலையணைகள் வழங்குமாறு பெங்களூர் சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றமும் கடந்த வாரம் படுக்கை மற்றும் தலையணைகள் வழங்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. எனினும் ஒரு வாரத்திற்கு மேலாகியும் தர்ஷனுக்கு படுக்கையும், தலையணைகளையும் சிறை நிர்வாகம் வழங்கவில்லை என தெரிகிறது. அதனைத்தொடர்ந்து தனக்கு படுக்கை, தலையணை வழங்க கோரி தர்ஷன் சார்பாக அவரது வக்கீல் சுனில் அதே நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதன் மீதான விசாரணையில் வக்கீல் பேசியிருப்பதாவது, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சிறை நிர்வாகமானது மனுதாரருக்கு படுக்கையும் தலையணைகளையும் வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவை சிறை நிர்வாகத்தினர் மீறி இருக்கின்றனர். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இதற்கிடையில் தர்ஷனை சிறைபிடித்து ஒரு மாதமாகியும் இதுவரையிலும் அவரை தனிமைப்படுத்தும் அறையிலேயே வைத்திருக்கின்றனர். ஆகவே மனுதாரருக்கு படுக்கையையும், தலையணைகளையும் வழங்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.