வயநாடு காங்கிரஸ் கட்சியினுடைய மாவட்ட பொருளாளராக இருந்தவர்தான் விஜயன். இவருக்கு ஜிஜேஸ் என்ற மகன் இருந்தார். இதில் விஜயன் கூட்டுறவு பேங்கில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பல கோடி ரூபாய் வரையிலும் மோசடி செய்ததாக புகார் பெறப்பட்டது. இதன் காரணமாக வேதனையடைந்த விஜயன் தனது மகனுடன் கடந்த வருடம் டிச-27ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விஜயன் எழுதியிருந்த கடிதத்தில் இருப்பதாவது, இப்பணத்தை கல்பெட்டா எம்எல்ஏ பாலகிருஷ்ணனிடம் கொடுத்ததாக சொல்லியிருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் சமரச பேச்சு வார்த்தையில், இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக காங்கிரஸ் உரிய பணத்தை ஒதுக்கும் என கூறியிருந்தது.

எனினும் இந்த குற்றச்சாட்டை பாலகிருஷ்ணன் மறுத்து விட்டதால் பலரிடம் பெற்ற பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. தற்போது விஜயனுடைய மற்றொரு மகனான விஜேஷ் என்பவரின் மனைவி பத்மஜா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக பத்மஜா நிரூபர்களிடம் கூறியிருப்பதாவது, காங்கிரஸ் தலைவர்கள் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளனர். மேலும் பணத்தை உரிய நபர்களுக்கு செலுத்துவதற்காக எங்களுடைய வீடு உட்பட அனைத்து சொத்துக்களும் அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக முதல் மந்திரியிடம் புகார் கொடுக்க இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.