தாம்பரம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி, தனது மகனைத் தராத ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கணவனின் கால்களை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே வசித்து வந்த தம்பதி தாமோதரன் (42) – வசந்தா (40). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், வசந்தா தனது கணவரைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார். அதன் பின்னர், தனது மகனைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு தாமோதரனிடம் வசந்தா கேட்டுள்ளார். ஆனால், அதற்குத் தாமோதரன் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி ரூ.4 லட்சம் பணம் கொடுத்துக் கூலிப்படையை இறக்கியுள்ளார். அந்தக் கூலிப்படையினர் தாமோதரனை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கி, அவரது கால்களை உடைத்துள்ளனர். இக்கோரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கூலிப்படையை ஏவிய மனைவி வசந்தா உள்பட 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தாமோதரன் கூலிப்படையினரால் கொடூரமாகத் தாக்கப்படும் பதறவைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.