தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். முன்னதாக, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பிற்காக மட்டும் 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் ரொக்கப் பணம் கிடைக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், தற்போது அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுகிறார்.
இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் முன்னதாகவே வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஒரு நாளைக்கு சுமார் 400 கார்டுதாரர்களுக்கு வீதம், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அதாவது ஜனவரி 14-ஆம் தேதிக்குள் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும். ரேஷன் கடைகளில் எவ்வித குழப்பமும் இன்றி பணத்தைப் பெற்றுக்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
