தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வின்ஸ்டார் சிவக்குமார் இணைக்கப்பட்ட விவகாரம், அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதாவது சேலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வின்ஸ்டார் சிவக்குமார். இவர் ‘வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்’ (Winstar India City Developers) என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 3,000 பொதுமக்களிடம் நிலம் மற்றும் முதலீடு தருவதாகக் கூறி, சுமார் 300 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்ததாகக் காவல்துறை தரப்பில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மோசடி வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், தவெக-வின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான KAS முன்னிலையில், வின்ஸ்டார் சிவக்குமார் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரும் நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய ஒருவரை, ஆரவாரத்தோடு கட்சியில் இணைத்திருப்பது தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வின்ஸ்டார் சிவக்குமார் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, எக்ஸ் (X) தளத்தில் சிவக்குமாருக்கு எதிரான வழக்குகள் மற்றும் அவர் தேடப்படும் குற்றவாளி என்ற விபரங்களை நெட்டிசன்கள் தீயாய் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கட்சியின் தூய்மையான இமேஜைக் கெடுக்கும் வகையில் இந்தச் சேர்க்கை அமைந்துள்ளதால், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இந்த விவகாரத்தைக் கேட்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய விசாரணைக்குப் பின் இந்த விவகாரத்தில் அதிரடி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.