நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அதிரடி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்களை இன்னும் சில மாதங்களுக்குப் பாஜகவினர் எவ்வித அவசரமும் காட்டாமல், அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சிறுபான்மையினருக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்து வரும் திமுகவால், தமிழக அரசியல் களத்தில் அதிமுகவின் இடத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது என்பதில் அவர் மிக உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழகத்தில் நீண்ட கால நோக்கில் பாஜக தனித்து வளர்வதற்கான மிகச் சாதகமான அரசியல் களம் தற்போதுதான் உருவாகியுள்ளதாக மாநில நிர்வாகிகள் அமித்ஷாவிடம் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.
பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் சிதறி வரும் வேளையில், பாஜகவிற்கான புதிய வாய்ப்புகள் திறந்திருப்பதாக விவாதிக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவின் இந்த ‘வெயிட் அண்ட் சீ’ (Wait and See) பாலிசி, தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாகத் திராவிட கட்சிகள் மத்தியிலும் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
