நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மிக அதிக பொருட்செலவில் உருவான ‘தி எலக்ட்ரிக் ஸ்டேட்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிக மோசமான திரைப்படங்களுக்கான ‘ராஸி’ (Razzie Awards) விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுமார் 320 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,650 கோடி) செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘தி எலக்ட்ரிக் ஸ்டேட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், திரை விமர்சகர்களிடம் வரவேற்பைப் பெறத் தவறியதுடன், எதிர்மறையான விமர்சனங்களையே அதிகம் பெற்றது. இதன் காரணமாகவே, ஆண்டின் மிக மோசமான படங்களைப் பட்டியலிடும் ‘ராஸி’ விருதுகளுக்கு இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/KpN98z8Kf5E?si=GrS0cJ64hdHe1iDW
இந்த ஆண்டுக்கான ராஸி விருதுப் பட்டியலில் ‘ஸ்னோ ஒயிட்’ (Snow White) மற்றும் ‘வார் ஆப் தி வேர்ல்ட்ஸ்’ (War of the Worlds) ஆகிய திரைப்படங்கள் அதிகபட்சமாக ஆறு பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக ‘ஹரி அப் டுமாரோ’ (Hurry Up Tomorrow) மற்றும் ‘தி எலக்ட்ரிக் ஸ்டேட்’ ஆகிய படங்கள் தலா மூன்று பரிந்துரைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
சிறந்த திரைப்படங்களைக் கௌரவிக்கும் உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 15-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. மேலும் ஆஸ்கர் விருதுகளுக்குச் சரியாக ஒரு நாள் முன்னதாக, அதாவது மார்ச் 14 அன்று ‘ராஸி’ விருதுகள் அறிவிக்கப்படுவது ஹாலிவுட்டின் நீண்ட கால வழக்கமாகும்.
